Monday, March 12, 2012

வருமா மீண்டும்

பல்விளக்கா பதநீர் 
பாயை சுருட்டாமல் ஏரிக்கரை 
அழகான காலை
ஆனந்தக் குளியல் 
சுடச்சுட இட்டிலி 
சுடும்வெயில் பம்பரம்
குளுமையான குச்சிஐஸ்
கூடவே தின்பண்டம்
வயிர்என்ன எந்திரமோ 
உச்சிவெயில் சாப்பாடு
திண்ணையில் சீட்டுக்கட்டு
திகட்டாத வானொலி
ஒலியும் ஒளியும்
ஞாயிறு திரைமலரும் திரைப்படமும் 
சைகையில் வரும் செய்தியும் 
கோவில் ஒலிபெருக்கி பாட்டு
காப்பியும் முருக்கும்
பாட்டிசொல்லும் கதைகள் 
தூங்க அழைக்கும் அம்மா 
துணையாய் அதட்டும் அப்பா 
படுத்ததும் வரும் உறக்கம் 
விடுமுறை நாட்கள்
வருமா மீண்டும்?

Thursday, February 2, 2012

போகிக் கவிதை.

போகிக் கவிதை.. 
போக்குவோம் சிலதை...

காஞ்சியில் வேலை முடித்து 
திருச்சிக்கு காரில் புறப்பட்டேன்.
மாலை ஐந்துமணி.

ஓரிரு காதை கடந்த பின்னே 
காரின் அச்சை முரிக்குமோர்
கடும் பள்ளம் சாலையில் கண்டேன்..
ஓரிரு மாதம் கடந்திருக்கும் அந்த
பள்ளம் உருவாகி.. 
யாரின் அலச்சியம் இது?

உத்திரமேரூர் அருகே செல்கையில்,
முன்னே ஒருலாரி தழும்பச் சல்லிஅதில்
அருகே செல்கையில் ஆட்டிய பள்ளத்தால் 
சட்டென ஒருகல் என்கார் கண்ணாடிமீது
யாரிடம் கூறுவது?

அரைமணி நேரம் பயணித்து ஓரிடம்
ஆங்காங்கே கடைகளும் மக்களும் 
விர்ரென ஒருவன் பைக்கில் குறுக்கே
அதிர்ந்து பிரேக் அடித்தேன் பதட்டம் பற்றியது.
யார் அவனுக்கு லைசன்சு கொடுத்தது?

ஒருவேளையாக நெடுஞ்சாலை வந்தது
சர்வதேச மாநாட்டிற்கு செல்லும் தலைவர்போல்
சர்..விர்.. என்று பறக்கும் வாகனங்கள்.
சுங்கச் சாவடியில் முன்னே செல்லவே  
மற்றவனை புறந்தள்ளும் கருங்காலிகள்..
எவண்டா அவன பெத்தான்? 

இருள் மங்கியது கருமை 
விளக்கால் விலகியது ஆங்காங்கே.
உயிரைக் காவுகேட்க்கும் சாலை குண்டர்கள்
ஓட்டுனராய் ஆங்காங்கே..
என்னடா வாழ்க்கை இது? 

இதுல என்கூட வந்தவர் செல்லில் 
யாரிடமோ கூறினார்..
"இவர் இன்னைக்கு புறப்பட்டா 
நாளைக்குத்தான் திருச்சி வருவார்.
அவ்வளவு பயந்தாங்கொள்ளி" - என்று..

Friday, September 17, 2010

ஓயாத சண்டை

எல்லை எங்கும் பதற்றம்
யார்பக்கம் நியாயம்?  விளங்கவில்லை

ஒருவன் திடமாய் வரதே என்று
விரட்டுகிறான்.
மற்றவன் விட்டேனாபார் என்று
மிரட்டுகிறான்

படைஎடுப்பவனை தூண்டியும் அடக்கியும்
அயலார் இருவர்

இரவுபகல் ஓயாது தொடர்கிறது சண்டை
அவ்வப்போது மாறிமாறி இருவருக்கும் வெற்றி

இவன் இடத்தில் முன்னர் அவன் இருந்தான் என்றும்
அவன் இடத்தை இவன் விழுங்கி விட்டான் என்றும்
அவ்வப்போது அறிக்கை வேறு

வளத்திலும் பலத்திலும் இருவரும் சளைத்தவர் இல்லை
எப்போதும் ஓயாத தீரவே தீராத எல்லைப்பிரச்சனை
இந்த கடலுக்கும் கரைக்கும்.

Monday, September 6, 2010

சுயதொழில் புரிவோரே


உணவு, உடை, உறைவிடம் கருதாது
உலகினில் உலவும் உவகை பாராது
எண்ணத்தில் இலக்கினை ஏற்றியே நாளெலாம்
எருதினை விஞ்சும் ஏற்றம் கொண்டோரே!

விழியினில் கணமும் அயர்ச்சி கொள்ளாது
வழியினில் வளத்தினை நோக்கியே நாளெலாம்
ஓயாமல் உழைக்கும் ஓங்கிய உள்ளங்களே
ஒருநாளும் உமைவெல்ல உலகினில் ஆளில்லை

விற்பனை தொழிலின் விருட்சங்களே நீங்கள்
பணிவாக யான்கூறும் கூற்றினை கேளீரோ?
வெற்றியது விபத்தல்ல வீரத்தின் விளைச்சல்
முதன்மையது இலகல்ல முயற்சியின் முத்து

ஏதோ வாழ்க்கையல்ல ஏற்றமே வாழ்க்கை
வாழவே உறக்கம் உறக்கம் வாழ்வல்ல
வெற்றியை பகிர்ந்துகொள்ள உறவுவரும் அதுவாய்
உறவுகள் மகிழ வெற்றிவராது அதுவாய்

சிறியதோர் வாய்ப்புகளே பெரியதோர் முடிவாகும்
நம்பிக்கை நனவாகும் நம்பிக்கையே நனவாக்கும்
உவகைகொண்டுவிட்டால் உலகையே மாற்றலாமே
உழைப்பு மட்டும் தீர்க்குமளவு இருக்கும்

எண்ணம் மாறுவதாலே வாழ்க்கை மாறும்
வெற்றிபெற கனவும் உழைப்பும் வேண்டும்
திட்டம் மட்டும் போதாது நம்பிக்கை வேண்டும்
பெரிய செயல்களெல்லாம் இவ்வாறே நடந்தன

ஒருநாளை எவ்விதம் கழிக்கிறோமோ - அவ்வாறே
ஒவ்வொருவரும் வாழ்வை கழிக்கிறோம்
உழைப்பு எப்போதும் மகிழ்ச்சி தருவதில்லை - ஆனால்
உழைப்பு இல்லாத மகிழ்ச்சி நிரந்தரமில்லை

மனிதனின் சிறப்பே செய்யாததை செய்வதே
மகிழ்ச்சியின் துவக்கம் வியர்வையே
இலக்கினை மறந்துவிட்டால்
இரட்டிப்பாய் உழைக்கநேரும்

மலைகளுக்குப்பின் மீண்டும் மலைகள் உண்டு
வெற்றிக்குப்பின் மீண்டும் வெல்லவழி உண்டு
சோதனைகளை சாதனையக்குவதே நமது
உண்மை மரபு.

அதிர்ஷ்ட்டம் என்பது முயற்சியும் சந்தர்பமும்
சந்திக்கும் புள்ளியே அன்றி வேறுதுவுமில்லை
உழைக்காமல் இந்தஉலகம் இல்லை
உழைக்காமல் இந்த உலகம் நமக்கில்லை

துணிவது ஆக்கி, தகுதியை தூக்கி,
அயர்ச்சியை நீக்கி, முயற்சியை ஊக்கி,
வெற்றியை கண்டு, விண்ணையும் வென்று,

அனைவரும் உமையே உதாரணமென  கொள்ளும்
வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.

Saturday, February 20, 2010

இயற்கை

பூந்தென்றல் சதிராடும் மாலையிலே
பூப்பூவாய்ப் பூத்திடும் சோலையிலே

தாமரைப் பொய்கையில் மீனினங்கள்
தாவிக் குதித்தாடும் மானினங்கள்

இத்தனை சூழ்ந்திடும் வேலையிலே
இளமந்திகள் தாவியே ஆடுதம்மா

ஆடிய ஆட்டத்தில் தேன்துளிகள்
அந்ததாமரைப் பூவினில் வீழ்ந்தவுடன்

செந்தாமரை சிரித்து குலுங்குதம்மா - என்
சிந்தையில் மகிழ்வு பிறந்ததம்மா..

காதலி


சுள்ளென காதினில் சுருதிகள் பாய்ந்திட
மெல்லென கால்களும் மேற்கொண்டு நடந்திட
வில்லென மதியினில் சிந்தைகள் இழுத்திட
கல்லென மனங்கொண்டு மதியத்தில் மயங்கினன்

கண்ணோடு இமைவந்து கடுமையாய் இணைந்திட
விண்ணோடு கலந்திட உயிர்மட்டும் விரும்பிட
மண்ணோடு உடலும் மனத்தோடு ஆசையும்
பன்னோடு  பிரியா இசையென இருந்தனன்

உடலும் உயிரும் உறவின்றி அல்லாட
வயிறும் தொண்டையும் வாட்டத்தில் திண்டாட
பயிரும் பசுமையுமாய் இணைந்திட்ட காதலியின்
பெயர்மட்டும் உச்சரித்தான் அன்பே அன்பே

Friday, January 29, 2010

முற்பகல் செய்யின்



செழுமையில் பிறந்தான் 
வளமையால் வளர்ந்தான் 
கவலைகள் ஏதுமின்றி 
அகவைகள் கடந்தான் 


வழக்கங்கள் நிறைவேற்ற 
ஏதோபடித்தான் எங்கெங்கோ திரிந்தான்
வயதும் வந்தது வஞ்சியும் வந்தாள்
இல்லறம் துவங்கினான் இலக்கேதும் இல்லாமல்


மனம்போன திக்கில் தினம்போக வாழ
குடும்பஅட்டையில் பட்டியல்நீண்டது 
எட்டுக்குழந்தைகள் வரிசையாய்பெற்று 
ஓட்டும்வயிறுடன் வளர்ந்தன வறுமையில்


எப்படியோ வாழ்க்கை உருண்டது அதுவாய் 
வளர்ந்தபிள்ளைகள் துளிர்த்தன குடும்பங்களாய்
திக்கிற்கொன்றாய் பறந்தன வளர்ந்தன 
ஓரிருவர் தவிர மற்றவர் தொலைவில் 


விடுமுறை பண்டிகை விழாக்கள் விசேஷங்கள் 
நெடுதூர மானாலும் சேர்ந்தனர் குலவினர்
முதுமை வந்தாலும் முதுகினில் பாரங்கள்
பெரியவர் இன்னும் ஓயாது உழைத்தார்


இல்லாள் வல்லானடி சேர்ந்தாள் ஓர்நாள் 
இல்லாதான் கொடுமை தெரிந்தது அவர்க்கு 
வருமானம் மெல்ல நிர்மூல மானதும் 
ஒரு தோளும் இல்லை அவர்சாய..


எல்லா மிருந்தும் இல்லாத வாழக்கையது 
தள்ளாத வயதினில் ஆதரவாய் யாருமற்று 
என்பத் தெட்டுவருட வாழ்கையை பின்னோக்கி 
துன்பத்தில் துடிதுடித்தார் தன்னிடம்ஏதுமின்றி 


கிழவனுக்கும் பெரியவருக்கும் உள்ள வித்தியாசம் - பணமே
பழமிருக்கும் மரப்பறவை வறண்டால் பறக்குமாமே
சேமிப்பது பணமோ அல்லது அன்போ - அது 
உன்கட்டுப்பாட்டில்  இருந்தால்மட்டுமே சிறப்பு.


வேறொருவரை நீ நம்பினால் வருமே வெறுப்பு..


உன் வாழ்க்கை உன் கையில்...