Tuesday, November 1, 2016

என்றெழுவாய் சகோதரி?

என்றெழுவாய் சகோதரி?
தினம் இரண்டாய் அவளைத்
தேடியது மனம்..
உதிரத் தொடர்பு இல்லையெனினும்
உறுத்துகிறது மனதில்..
அவள் ஏனோ
இரண்டு தினங்களாய்
தென்படவேயில்லை..
இரண்டாம் நாள் கேட்டேன்
எங்கேஅவள் என்று.
ஏதோ உடலுபாதையாம்
சொல்லிவிட்டிருந்தாள்.
மூன்றாம்நாள்
முகம்கண்டு
மூர்ச்சையானேன் .
உதிரச் சிவப்பில்
உருக்குலைந்த கண்கள்..
கன்னிப்போன கன்னமும் உதடும்..
உயிர்போகும் விபத்தில்
மயிரிழையில் தப்பியவள்போல
மங்கை என் தங்கை..
ஏனடி தங்காய்
எமனடி பிழைத்தாயோ?
ஊனெலாம் நோகவே
உயிருடன் மீண்டாயோ?
இல்லைஅண்ணா
இதுஅவர் தந்தபரிசு..
யாரம்மா அந்த அவர்?
அப்பனின் ஆணைக்கு
தப்பனின் கயிற்றிற்கு
தலையன்று குனிந்தவள்
எழவில்லை இன்றுவரை அண்ணா
வேலைக்குச் செல்லாமல்
வெட்டியாச் சுற்றுவார் பின்
மாலை வந்துவிட்டால்-மதுச்
சாலை சென்றிடுவார்
முட்டக் குடித்துவிட்டு
முட்டுவார் என்தலையை
முற்றச் சுவற்றில் அடிக்கடி
அன்றுதான் கொஞ்சம்
அதிகம் அண்ணா..
ஏனம்மா இக்கொடுமை
எதிர்த்திடவே உன்வீட்டில்
எவரும் இல்லையோ?
இருந்தென்ன அண்ணா?
வீட்டில் இருப்பவர்களுக்கு
விருந்தல்லவா இச்செயல்?
அப்பனின் வீடோ
அடைக்கலம் அற்றது.
இருப்புத் தடியால்
இடித்தது போலவே
இருக்குதம்மா உன்முகம்..
இப்படியொரு
இன்னலின்
இறுதிதான் என்ன?
எதுவும் தெரியவில்லை
எனக்கு அண்ணா.
இரண்டு பிள்ளைகளையும்
எப்படியோ வளர்க்கணும்
அப்பனில்லா அவலநிலை
அவர்களுக்கு வேண்டாமே அண்ணா.
அது எனக்கும்
ஆபத்துதானே அண்ணா?
அவரில்லா வீடென்றால்
மோந்துபார்க்க
எத்தனயோ நாய்க்கூட்டம்
அதனால் போகட்டும் அவர்தானே..
உதிரமாய் உதிர்ந்தது அவள் கண்ணீர்..
வருகிறேன் அண்ணா.
அவருக்கு இதுகூட
அடிக்கக் காரணமாகும்.
அப்புறம்
அதற்கொருமுறை
ஆரம்பம் இருக்கும்.
உடலில் வலுவில்லை.
இந்தியாவிற்கு கிடைத்த
இனிய விடுதலை
இன்னும்
இல்லங்களுக்குச்
செல்லவில்லை.
சட்டங்கள் இருந்தென்ன?
தண்டனைகள் இருந்தென்ன?
வந்தால் காப்பேன் என்பதா அரசு?
எனக்கென்ன என்றே இருப்பதா சுற்றம்?
ஊரே நாறுகிறது.
தனியாய்ப் பெண்ணொருத்தி
வாழவே வழியற்று,
இந்த
ஊரே நாறுகிறது...
அந்த நாற்றத்திலும்
ஊறும் புழுக்களாய் நாம்..
வளர்ந்த சமுதாயத் தூண்களாய்
நாளைய உலகின் விடிவெள்ளிகளாய்..
மூக்கைப் பிடித்துக்கொண்டே
நகர்கிறோம்..

மெல்லச் சாகிறாய் நீ... (Inspired by the poem "you are dying slowly" by Pablo Neruda

As inspired by the poem "You start dying slowly" by Pablo Neruda and as requested by Mr. Vijayaraghavan Kuppusamy; in Tamil.
மெல்லச்சாகிறாய் நீ...
பயணிப்பதை மறந்தாலோ,
படிப்பதைத் துறந்தாலோ,
பூவுலகின் ஓசைகளை
புறக்கணித்துச் சென்றாலோ,
பலேஎன் றுனையேநீ
பாராட்ட மறந்தாலோ,
மெல்லச் சாகிறாய் நீ...
உனதருமைநீ கொன்றாலோ,
உதவிதருவோரை உதறினாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
பழக்கத்திற்குநீ அடிமையானாலோ,
பாதைமாற்றாது பயணப்பட்டாலோ,
வழக்கங்கள்வழுவி வாழாவிட்டாலோ,
வண்ணம்பலதை அணியாவிட்டாலோ,
புதியவரிடமேநீ பழகாதுபோனாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
இருகண்கள் மளிறவேஉன்
இருதயம் எகிறவைக்கும்
தீராக்காதலதை உணராவிட்டாலோ,
அதன்
தீவிரஉணர்வுகளை தீண்டாவிட்டாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
மனமகிழாப் பணிமாற்ற
மெனக்கெடாது வாழ்ந்தாலோ,
நிலையற்றவற்றிற்கு
பாதுகாப்பு வழிவிடுத்து
புரிவேனென்ற புதுமுயற்சி புனையாவிட்டாலோ,
கனவைக் கைபிடிக்க
கடைசிவரை செல்லாதுவிட்டாலோ,
ஒருமுறையேனும் உன்னையேநீ
ஓடிப்பாரடாவென உதைக்காவிட்டாலோ,
மேல்லச்சாகிறாய் நீ...
Translation - Prasanna Venkatesan